சிறு வயது சிந்தனைகள் - I
என்னவோ தெரியவில்லை? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும் அல்லது படித்த பாடங்களும் அல்லது கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம் மனதில் ஆழமாக (உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால் கூறுமளவு!) பதிந்து விடுகின்றன. அதே சமயம், வேலைக்கு சென்று நான்கைந்து வருடங்களில், இந்த திறமை குறைந்து, போகப்போக காணாமல் போய் விடுகிறது! இதற்கு, வயது கூடும்போது ஏற்படும் ஞாகபக் குறைவு ஓரளவு காரணமாக இருப்பினும், எனக்கென்னவோ, தற்போது நம்மில் பலர் சந்திக்கும் வேலைச்சூழல் தரும் அழுத்தமும், நாம் வாழும் ஒருவித monotonous வாழ்க்கையும் நம் ரசிப்புத்தன்மையை மங்க வைப்பதால் இந்நிலை உருவாகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது!
என் நினைவில் இன்னும் வாழும் சில திரைப்பாடல் வரிகள்!
1. காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்! சென்றதை எண்ணி அழுகின்றேன், வருவதை எண்ணி சிரிக்கின்றேன்!
2. காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்!
3. நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே! ... நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே, தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே, தெம்மாங்கு பூந்தமிழே, தென்னாடன் குலமகளே!
4. உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் ... பொன்னெழில் பூத்தது புது வானில், வெண்பனி தூவும் நிலவே நில்!
5. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா!
நம்மில் திருமணமான பலருக்கு, குழந்தைகளுடன் செலவிட (வீட்டினுள்ளேயே, கேரம்,செஸ்,தாயம்,டிரேட் (Trade) விளையாட்டுக்கள் விளையாட) நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கும் படிப்பு சம்மந்தப்பட்ட வீட்டு வேலை (HOMEWORK) இப்போதெல்லாம் அதிகம் இருப்பதால், ஒருவருடன் ஒருவர் மகிழ்ச்சியுடன் விளையாடுவது என்பதே அவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் பரிசு போலாகி விட்டது. பல குழந்தைகள் கிடைக்கும் நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலேயே செலவிடுகின்றன. நான் சிறுவயதில் (வறுமையிலும் கூட!) எவ்வளவு குதூகலத்துடன் விளையாட்டில் நேரம் கழித்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கிறேன். பள்ளிக்காலங்களில், TV-யில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் "ஒளியும் ஒலியும்" (வெள்ளிக்கிழமை தோறும்) மற்றும் Wimbledon Tennis Final ஆகியவைகளே!
மெரீனா கடற்கரையிலும், திருவல்லிக்கேணி குளக்கரைத் தெருக்களிலும், வற்றிய குளத்திலும், அகண்ட மொட்டை மாடியிலும் ஆடிய கபடி, underarm cricket, கில்லி, பம்பரம், கோலி (குழி, பேந்தா!), குச்சியால் சைக்கிள் டயர் விரட்டும் விளையாட்டுக்களையும், வீட்டுக்கூடத்திலும் ரேழியிலும் திண்ணைகளிலும் ஆடிய chess, Trump, அதி வேக ஊஞ்சல் விளையாட்டுக்களையும் நினைத்துப் பார்க்கும்போது Real Nostalgia!! அதற்காக, நான் படிப்பிலும் சோடை போகவில்லை! படிக்க வேண்டிய சமயத்தில் படித்து, மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவனாகவே திகழ்ந்தேன். 25 வருடங்களுக்குப் பின்னும் பல ஆசிரியர்களுடன் உறவு தொடர்கிறது.
அந்நாட்களில், "BOMBAY TRADE" என்ற விளையாட்டு எங்களிடையே மிகவும் பிரபலம்! பம்பாயிலுள்ள இடங்களின் (Juhu, Versova, Marine drive, Santacruz, Dadar, Malabar Hill, Chowpathy, Zaveri Baazar, Kalpadevi, Parel, Pydoni, Fort, Shivri etc) பெயர்களுடன் கூடிய ஒரு அட்டையும் (board), செயற்கை பணமும் (நோட்டு மற்றும் நாணய வடிவத்தில்), dice மற்றும் வீட்டைக் குறிக்கும் பல நிறத்து சிறு பிளாஸ்டிக் வடிவங்களும் இவ்விளையாட்டுக்கு பிரதானமானவை. இரு ஜோடிகள் எதிராடலாம்! Dice-ஐ உருட்டி, உங்களைக் குறிக்கும் coin-ஐ நகர்த்தி, உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு இடங்களை வாங்கலாம். எதிராளியின் coin உங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு வர நேர்ந்தால், உங்களுக்கு அதற்கான வாடகை தர வேண்டும்! ஓரே நிறமுடைய 3 இடங்களுக்கு சொந்தக்காரராகி விட்டால், இரட்டிப்பு வாடகை தர வேண்டும்!! அதே சமயம், நீங்கள் அவ்விடங்களில் 1,2,3 வீடு கட்ட (உங்களிடம் உள்ள பணத்தை பொறுத்து!) தகுதி பெற்று விடுவீர்கள்! வீடு கட்டியிருக்கும் சமயம், எதிராளி அவ்விடத்திற்கு "வருகை" தந்தால் இன்னும் அதிக பணம் உங்களுக்கு தர வேண்டியிருக்கும்! சாதாரணமாக இந்த ஆட்டம், பரமபதம் போலவே, லேசில் முடிவடையாது. பணம் காலியாகி விட்டால், எதிராளியிடமிருந்தோ பொதுக்கணக்கிலிருந்தோ கடன் பெற்றுக் கொண்டு ஆட்டத்தைத் தொடரலாம். அக்காலத்தில், நாங்கள் 2-3 நாட்கள் தொடர்ந்து (board-ஐ இரவு வேளை அப்படியே கலைக்காமல் வைத்திருந்து!) Trade ஆடியிருக்கிறோம்! இக்காலத்தில், இந்த ஆட்டம் "BUSINESS" என்றழைக்கப்படுகிறது.
இக்கட்டுரையை, என் ஒன்பதாம் (பத்தாவதோ?) வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இடம் பெற்ற, என் நினைவில் இன்று வரை பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதிமாற்கலைஞரின் கடல் வாழ்த்துக் கவிதையோடு, நிறைவு செய்கிறேன்! கடல் நிலத்திற்கு முன்னோடி என்பதையும், காற்றை கடலின் காதலனாக மற்றும் மேகத்தை காற்றும் கடலும் சேர்ந்துருவாக்கிய ஆண்மகவாக உருவகப்படுத்தியும், கடல் எவ்வளவு கழிவை உள்வாங்கினாலும் பரிசுத்தமாக இருப்பதையும், மிக மிக அழகாக இக்கவிதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வாழியே கடலே, வாழியே கடலே!
உலகினுக்கியைந்த ஒரு துணைக்கருவியே!
அலகிலா உருவம் அடைந்தோய்!
நிலத்தினை ஆக்கி அன்புடன் காக்கும் பரவாய்!
உன்னை அடுத்து வந்துறு நாவாய்களை
நன்னர் செலுத்தும் நங்காய்!
நின்னிளங் காதற்றலைவனாம் மோது காற்றினால்
புனர் காரெனும் புனிற்றிள மகனால்
பயிர்த் தொகையோடு உயிர்த் தொகை மகிழ
தாவா இன்பம் தருந்தனித்தாயே!
ஓவா தொல்லென ஒலிக்குங் கடலே!
உந்தன் பெருமையுமுயர்வும்
துன்றுமடியின்மையும் தூய்மையும்
எந்தனால் எடுத்தியம்பலியலுமோ!!!
என்றென்றும் அன்புடன்
பாலா